சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
சமூக நலன் என்பது குடும்பங்களுக்கு மிகவும் தேவைப்படும் தருணத்தில் ஆதரவு சென்றடைவதை உறுதி செய்வதாகும். பெண்களின் முன்னேற்றம் அதன் இன்றியமையாத பகுதி.
நலன் திட்டங்கள், அத்தியாவசிய சேவைகள், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான உதவிகள் மற்றும் பெண்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
Social Welfare and Women Empowerment Department
2026–27 நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் 21 தொலைநோக்கு முக்கிய அறிவிப்புகள்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 300 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். மாநகராட்சிகளில் 98, நகராட்சிகளில் 102, பேரூராட்சிகளில் 100 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் செயல்படும் 1,662 குழந்தைகள் மையங்களில் PUF Panel கூரைகள் அமைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மையங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

9 மாவட்டங்களில் பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதிகளில் 100 மாதிரி குழந்தைகள் மையங்கள் அமைக்கப்படும்.

50 வட்டாரங்களில் 1.04 லட்சம் குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும்.

4–5 வயதுடைய 2.70 லட்சம் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டு புத்தகங்கள் வழங்கப்படும்.

2–5 வயது முன்பருவக் குழந்தைகளுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கல்வி காணொளிகள் உருவாக்கப்படும்.

12 மாவட்டங்களில் 5,502 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4,42,096 மாணவர்களுக்கு இரத்தசோகை தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

123 நகர்ப்புற பள்ளி சத்துணவு மையங்களுக்கு சமையலறை மற்றும் களஞ்சிய அறைகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு, மறுவாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு மற்றும் நீதித்துறையிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்த POCSO Portal 2.0 அறிமுகப்படுத்தப்படும்.

குழந்தைகள் உதவி எண் 1098-ன் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் வலுப்படுத்தப்படும். மாநில கட்டுப்பாட்டு அறையில் 7 கூடுதல் அழைப்பு மையங்கள் மற்றும் பிரத்யேக மொபைல் செயலி ஏற்படுத்தப்படும்.

குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கான தனிநபர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் Database Management System மூலம் உருவாக்கப்படும்.

நகர்ப்புற பெண்களின் பொருளாதார பங்கேற்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பிற்கான காரணங்கள் மற்றும் தேவையான கொள்கை ஆதரவுகள் குறித்து மாநில அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பொது–தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வில்லம் அமைக்கப்படும். தங்குமிடம், மருத்துவம், பராமரிப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் வழங்கப்படும்.

65 அரசு உதவி பெறும் முதியோர் இல்லங்களில் பிசியோதெரபி, வலி மேலாண்மை மற்றும் பல்லியேட்டிவ் பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும்.

38 மாவட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, அரசு நலத்திட்டங்கள் குறித்த தகவல், வழிகாட்டுதல் மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.

மூத்த குடிமக்களின் தேவைகள், நலத்திட்டங்கள், சேவைகள், திறன்கள் மற்றும் அனுபவங்களை பதிவு செய்து, தன்னார்வ சேவை மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் Repository உருவாக்கப்படும்.

திருனர் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான ஒருங்கிணைந்த Single Window Platform உருவாக்கப்படும்.

சென்னை, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் “அரண் இல்லங்கள்” மூலம் திருநங்கையர்களுக்கு ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் திருநங்கையர் நலக்குழுக்கள் அமைக்கப்படும். அரசு நலத்திட்டங்களை கண்காணித்தல், ஆவண முகாம்கள், திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.